செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெம்மேலி கிராமத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 7,709 சதுர அடி நிலத்தில் செயல்பட்டு வருகிறது ‘ஜெயந்தி டெய்சி விலங்குகள் காப்பகம்’.
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்படும் தெருநாய்கள், பூனைகளுக்கு இக்காப்பகம் மருத்துவச் சிகிச்சையும் நிரந்தரப் பராமரிப்பும் அளித்து வருகிறது.
வள்ளலார் பல்லுயிர்க் காப்பகத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறப்பட்டு வந்த நிலையில், 2024-25 நிதியாண்டுடன் அது நிறுத்தப்பட்டது.
இதையடுத்தே காப்பகத்தை நடத்திவந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி, காப்பக நிலம், கட்டடங்களை எவ்விதக் கட்டணமும் இன்றி சென்னை மாநகராட்சிக்கு வழங்க முன்வந்து கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது அங்கு சுமார் 250 நாய்களும் 80 பூனைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் உள்ள தெருநாய்களைக் காப்பகங்களில் பராமரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சென்னை மாநகராட்சி கூடுதல் காப்பக வசதிக்காக இந்த நன்கொடையை ஏற்று நடத்தத் திட்டமிட்டுள்ளது.
சட்ட நடைமுறைகள் முடிந்தபிறகு ‘ஜெயந்தி டெய்சி விலங்குகள் காப்பகம்’ என்ற அதே பெயரிலேயே மாநகராட்சி இதனைத் தொடர்ந்து நிர்வகிக்கும்.


