தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் விசிக வெளியேறும்: திருமாவளவன்

2 mins read
9b45f495-c6c4-414c-be15-515c762024dd
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.  - படம்: ஊடகம்

சென்னை: திமுக உடன் பாமக கூட்டணி அமைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது.

இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

பாமக தொடர்பாகவும் திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் தமது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

“பாமகவுடன் உறவை நாங்கள் முறித்துக் கொண்டது ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

“பாமக வன்னியர்களைத் தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

“தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள்.

“நான் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் யாருக்கும் நெருக்கடி தரமாட்டேன். நிர்பந்தம் தரமாட்டேன். அது அவர்கள் எடுக்கும் முடிவு.

“திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே அப்படி ஒரு நல்லிணக்கம் இருந்து, அப்படி ஒரு முடிவு எடுத்தால் நான் தலையிட மாட்டேன்.

“நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். நாங்கள் தனியாக நிற்போம். சும்மா வேட்பாளர்களை நிறுத்துவோம்.

“வெற்றிபெறுவது, தோற்பது பற்றி எங்களுக்குப் பிரச்சினையே இல்லை. நாங்கள் எங்களது கொள்கை எதுவோ அதற்காகத்தான் களத்தில் நிற்கிறோம்.

“தற்போது நான்கு எம்எல்ஏக்கள் உள்ளோம். அடுத்த தேர்தலில் ஒருவருமே இல்லை என்றாலும் நாங்கள் கவலைப்படப் போவதில்லை,” என்றார் திருமாவளவன்.

குறிப்புச் சொற்கள்