தாது மணல் முறைகேடு: கனிமவள நிறுவனங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை

2 mins read
94018cb2-9b92-4809-b56a-454481fa0563
சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பான முக்கிய நடவடிக்கையாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிறுவனங்களில் சோதனை நடத்தினர். - படம்: தமிழக ஊடகம்

நெல்லை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாது மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கடலோரப் பகுதகளில் இயங்கி வரும் கனிமவள நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் ஏப்ரல் 5ஆம் தேதி அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தின் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில், தாது மணல் அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக, கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் ஆகியன இப்பகுதிகளில் உள்ளன.

இதைப் பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கு தாது மணலைச் சட்ட விரோதமாக அனுப்பி வைப்பதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து விவி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 2012ஆம் ஆண்டு சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இச்சிறப்பு குழுக்களும் தீவிர விசாரணை மேற்கொண்டு தங்களுடைய இறுதி அறிக்கையை அளித்தன.

அந்த அறிக்கைகளில், தாது மணல் கடத்தல் காரணமாக தமிழக அரசுக்கு ஏறக்குறைய 5,800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பான முக்கிய நடவடிக்கையாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிறுவனங்களில் அதிரடிச் சோதனைகளை முடுக்கிவிட்டனர்.

நெல்லை மட்டுமல்லாமல் இம்முறைகேடு தொடர்பாக சென்னையிலும் மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழக கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் திருநெல்வேலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிபிஐ சோதனை நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், மாநில அமைச்சர் அதேபகுதிக்கு வருகை தந்தது பேசுபொருளாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்