சென்னை: மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நூறு விழுக்காடு சாலை வரி விலக்கை தமிழக அரசு மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு நிலையான போக்குவரத்துத் தீர்வாக மின்சார வாகனங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாகவும், பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மின்கலன்களில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியபடி உள்ளன.
அதனால்தான் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களின் தேவை பெருகி வரும் நிலையில் தமிழகம் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல புகை வெளியீடு இல்லாததால் காற்று மாசு மின்சார வாகனங்கள் மூலம் குறைகிறது. இதனால் நகரங்களில் சுவாசக் கோளாறுகள், ஆரோக்கிய பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. இதற்காகும் செலவும் மிகவும் குறைவாக இருக்கும்.
முக்கியமாக, இந்த வாகனங்களுக்கு வீட்டில் அல்லது மின்னேற்று நிலையங்களில் குறைந்த செலவில் மின்னூட்டம் செய்துகொள்ள முடியும். பராமரிப்பும் எளிதாக இருக்கும். ஏனென்றால், என்ஜின் ஆயில், கிளட்ச் போன்ற தேய்மானம் தரும் உதிரி பாகங்கள் மின்சார வாகனங்களில் இல்லை.
எனவேதான், மக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஓர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மின்சார வாகனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்குச் சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 விழுக்காடு சாலை வரி விலக்கானது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் 2027 டிசம்பர் 31ஆம்தேதி வரை மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது,” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெரிவிக்கிறது.
தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் அந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தில் மின் வாகனப் பயன்பாடு 2025ஆம் ஆண்டு 7.8 விழுக்காட்டை எட்டிவிட்டது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

