சென்னையில் விடாமல் பெய்யும் மழை; சாலைப் போக்குவரத்து, விமானச் சேவை பாதிப்பு

2 mins read
ce560a59-c4c3-4c87-ac5e-0dbdac3f60bf
திங்கட்கிழமை விடியற்காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதையடுத்து, வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி என நகரின் பல பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய கனமழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், போக்குவரத்துச் சேவைகள் முடங்கின.

இரவு முழுவதும், மயிலாப்பூரில் 80 மிமீ, அயனாவரத்தில் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 60 மி.மீ மழையும் பதிவானது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.

தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியது.

துபாய், லண்டன், சார்ஜா ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாம‌தமாகச் சென்னையில் தரையிறங்கின.

மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் செல்லும்10 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை தொடரும் என வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

வரும் 19ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்