தலைதுாக்கும் வன்முறை சம்பவங்கள்: கட்டுப்படுத்த காவல் மாணவர் படை

2 mins read
a1210ab7-8a95-4c57-9021-a021e35bff94
தமிழகத்தில் பல்வேறு பககுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் தகவல்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: மாணவர்கள் இடையே நற்சிந்தனைகளை வளர்க்கவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் மாணவர் படை பெரும் பங்காற்றும் என காவல்துறை கூறியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டிலேயே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் மாணவர் படை உருவாக்கப்பட்டது. பின்னர், வேலுார், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு அது விரிவுபடுத்தப்பட்டது. எனினும் பின்னர் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் தகவல்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில், 12ஆம் வகுப்பு மாணவர் வீடு புகுந்து வெட்டப்பட்டது, துாத்துக்குடியில் பேருந்தில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது, நெல்லையில், 8ம் வகுப்பு மாணவனை, மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

வன்முறையைக் கட்டுப்படுத்த சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காவல் மாணவர் படையை உருவாக்கும் பணியில், காவல்துறை ஈடுபட்டுள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகியுள்ளது.

“காவல் துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து, காவல் மாணவர் படையை உருவாக்கி வருகின்றனர். இப்படையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாகியுள்ளனர்.

“மாநிலம் முழுதும் காவல் மாணவர் படை விரிவுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்,” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்