சென்னை: சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகன்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள சேகர்பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன், விக்னேஷ் ஆகியோருக்குத் தொடர்புடைய சாலைக் கட்டுமானக் குத்தகை நிறுவனங்கள், வடபழனியில் அருள்முருகன், கீழ்ப்பாக்கத்தில் பிரேம் குமார் ஆகியோரது வீடுகள், ஏழுகிணறு, அடையாறு பகுதிகளில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமைச்சர் சேகர்பாபு தற்போது துறைமுகம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

