சென்னை: தமிழ் நாடு முழுவதும் இயங்கி வரும் பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவராஜ் நடராஜனின் வீடு, பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா உரிமையாளர் வீட்டிலும் அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (அக்டோபர் 17) பதினைந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோதனையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பூர்விகா நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்கள், எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளனர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பூர்விகா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிறுவனம் கைப்பேசி, மின்னியல் சாதன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.


