சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் பரபரப்பு நிலவியது.
பிரபல இரும்புப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகங்கள், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை தொடங்கி, மாலை வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் தொடர்ந்து அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அமைச்சர்கள் சிலரால்கூட இத்தகைய நடவடிக்கையில் இருந்து தப்ப முடியவில்லை.
அண்மையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை, அவர் சார்ந்துள்ள திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தொழில் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை வந்த வருமான வரித்துறையினர், உடனடியாக சோதனை நடத்தினர்.
சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் இதேபோன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்புப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அந்தத் தனியார் நிறுவனம், சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இயங்கி வருகிறது.

