மதுரை: கல்வியிலும் வரலாற்றிலும் உலகிற்கு வழிகாட்டியாகத் திகழும் மதுரை நகரம், தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் முதன்மை மாவட்டமாக இருப்பது வேதனையளிப்பதாக ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சங்கீதா, பெற்றோர் தங்களது குழந்தைகளின் செயல்களைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
“தீண்டாமை, போதைப் பொருள் பயன்பாடுகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே அவற்றை முழுமையாகத் தடுக்க முடியும். தற்போதைய காலத்தில் இது மிகவும் அவசியம்,” என்றார் ஆட்சியர் சங்கீதா.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முந்திய அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரையின் மூன்றாவது பெண் ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள சங்கீதா, அந்நகரில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிப்படையாகக் கூறியிருப்பது ஆளுந்தரப்பு வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.