தமிழகத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

2 mins read
f77558eb-37e2-4ea1-846c-b59d8ca8e814
போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மாநிலத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு, சிறார்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு பெண்கள், சிறார்களுக்கு எதிரான 3,084 வழக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு 3,243ஆக அதிகரித்தது. இவற்றுள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 1,885 ஆகும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 2023ல் 406 ஆகவும் 2024ல் 471 ஆகவும் உயர்ந்தது.

இதேபோல் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

முந்திய ஆண்டுகளைவிட, ஆக அதிகமாக கடந்த 2024ஆம் ஆண்டு 6,929 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2022ல் 4,968 போக்சோ வழக்குகளும் 2023ல் 4,581 போக்சோ வழக்குகளும் பதிவாகி இருந்தன.

அண்மைக் காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

குறிப்பாக, பள்ளிச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளிவருகின்றன.

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு, வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது மேற்குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்