சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சாலையில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 11,000லிருந்து 13,000ஆக அதிகரித்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அது நடத்திய கணக்கெடுப்பில், ராயபுரம் வட்டாரத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வீடற்றோர் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது.
வேலை தேடி பலர் பிற மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் 9623 ஆக இருந்த வீடற்றோரின் எண்ணிக்கை மூன்றே மாதத்தில் அதிகரித்துள்ளது. அதாவது, மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 13,000ஐத் தாண்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
பிற மாநிலங்களிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக ராயபுரம் வட்டார மன்ற உறுப்பினர்களில் ஒருவரான ராஜேஷ் ஜெயின் இந்திய ஊடகத்திடம் கூறினார்.
மேலும், வீடற்றோரின் பிள்ளைகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும் அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

