தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் சாதனையளவாக நெல் விளைச்சல் அதிகரிப்பு

2 mins read
693fde3b-d76c-42ae-b932-478cf2dd1835
60 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதுடன் சாகுபடி பரப்பு 6.37 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்றுச் சாதனை என்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாக அதிமுகவினர் எழுப்பிய கேள்விகளுக்கு திரு சக்கரபாணி பதில் அளித்தார்.

டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடி கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்றுச் சாதனை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆறுகள், ஏரிகள் முறையாகத் தூர்வாரப்பட்டதாலும், குறுவைத் திட்டத் தொகுப்பு முறையாக விநியோகம் செய்யப்பட்டதாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது, இந்த ஆண்டு 6.13 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரவை ஆலைகளுக்குத் துரிதமாக அனுப்பப்பட்டுள்ளது. நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 25 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 77.196 மெட்ரிக் டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்