சென்னை: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 விழுக்காட்டுக்கு மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு, நிதிக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
“முக்கியமான திட்டங்களைத் தீட்டி அதனை நிறைவேற்றுவது மாநில அரசின் கையில்தான் உள்ளது. வரிப் பகிர்வு முறையாக வழங்காத காரணத்தினால், மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
“இந்த நிலையில் மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வரிப் பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்குகிறது. 41 விழுக்காடு நிதிப் பகிர்வு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டாலும், 33.16% மட்டுமே வழங்கப்பட்டது. தமிழகத்திற்கான வரிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
“நிதிக் குழு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பது போல் உள்ளது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்குச் சமச்சீரான வரிப் பகிர்வு அளிக்க வேண்டும்.
“கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரிப்பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இயற்கைப் பேரிடரால் ஏற்படும் இழப்புகளை சீரமைக்க உரிய நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்,” என்று திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.

