கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் வெப்பநிலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்குள்ள வட்டக்கானல் பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள்.
இங்கு நிலவும் இதமான கால நிலையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் வருகை புரியும் இவர்கள் மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாட்டை வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கு வார வழிபாட்டில் கூடும் இஸ்ரேலிய சுற்றுப் பயணிகளைத் தாக்க திட்டமிட்டிருந்ததும், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்ததாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால் வழக்கமாக இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்புக் கருவிகளும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்புக் கருவிகளைச் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், பாதுகாப்பைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.