சென்னை: சென்னை விமான நிலையத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து விட்டதாக பயணிகள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
தங்களைப் போலவே விமான நிலைய ஊழியர்களும், பாதுகாப்புப் படையினரும் நாய்க்கடிக்குப் பயந்து அச்சத்துடன் வலம் வருகிறார்கள் என பயணிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
சில நாள்களாக சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. உள்நாட்டு, அனைத்துலக முனையங்களில் பயணிகளின் வருகைப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நாய்கள் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது.
சில சமயங்களில் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது அவை ஆவேசமாக குரைக்கும் சத்தத்தைக் கேட்டு விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் பீதியடைந்து ஓட்டம் பிடிக்கின்றனர் எனவும் சமூக ஊடகப் பதிவுகளில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விமான நிலைய வளாகத்துக்குள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் கும்பலாகப் பாய்ந்து ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சிகளைக் காண முடிவதாக சிலர் கூறுகின்றனர்.
இதையடுத்து, விமான நிலைய வளாகத்துக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு இதே போன்று பயணிகள் பாதிக்கப்பட்டபோது மாநகராட்சி ஒத்துழைப்புடன் 40க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிபட்டன. அதன் பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுவது என விமான நிலைய ஆணையம் முடிவு செய்து இருந்தது.
அதற்கு ஏற்ப செயல்பட்டு நாய்த் தொல்லையைக் குறைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

