ஆண்டுதோறும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் தவறாமல் நிகழ்கின்றன.
கடந்த 2003 முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மொத்தம் 23 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்திய அளவில், 2017 முதல் 2021 வரை 251 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையைவிட மிகக் குறைவு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடக்கின்றன என்பதே இவர்களின் வாதமாக உள்ளது. பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவதே இல்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
சாதி ஆணவக் கொலைகளைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பின்னணிக் காரணங்கள் இருக்கக்கூடும். வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொள்வது ஒருவகை என்றால், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் வெட்டிச்சாய்த்த சம்பவங்கள் சிலவும்கூட பதிவாகி உள்ளன. பெரும்பாலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றன தரவுகள்.
தாயின் கண் முன்னே கொல்லப்பட்ட மகன்
அண்மையில் நெல்லையைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற 27 வயது இளையர், பெற்ற தாயின் கண் முன்னே வெட்டிச் சாய்க்கப்பட்டார்.
நெல்லையைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும் கவினும் காதலித்து வந்தனர். கவின் நல்ல பணியில் இருந்தார். வழக்கம்போல் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். சுபாஷினியின் தாய், தந்தை இருவருமே காவல்துறை உதவி ஆய்வாளர்கள்.
பட்டியலினத்தைச் சேர்ந்த கவினைத் தன் சகோதரி காதலிப்பது சுபாஷினியின் தம்பியான 23 வயது சுர்ஜித்துக்கும் பிடிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சில நாள்களுக்கு முன்பு சுபாஷினி பணியாற்றும் மருத்துவமனைக்கு தன் தாயுடன் சேர்ந்து தனது தாத்தாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார் கவின்.
அப்போது அங்கு திடீரென வந்த சுர்ஜித், பேச வேண்டும் எனக் கூறி, கவினை அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவரது தாயின் முன்னிலையிலேயே கவினைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
இப்போது தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளனர்.
தன் சகோதரியுடன் கவின் பழகியதை ஏற்க முடியாமல் கொலை செய்ததாக சுர்ஜித் அளித்த வாக்குமூலம், நடந்திருப்பது ஆணவக்கொலை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
உயர் நீதிமன்றம் கடும் வேதனை
தமிழ்நாட்டில் அண்மையில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டதாக நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கொலைகளைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கோரி வருகின்றன.
“ஒவ்வொரு சாதி ஆணவக் கொலையையும் குற்ற வழக்காகப் பதிவு செய்வது தொடங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கு காவல்துறை படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
“அனைத்துத் தரப்பில் இருந்தும் அழுத்தம் தருவதால் சமாளிக்க முடியாமல் விழி பிதுங்குவதாகக் கூறும் தங்களின் நியாயமான புலம்பல் யார் காதையும் எட்டியதாகத் தெரியவில்லை,” என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
கல்வியாளர்களின் கோரிக்கை
“சாதி மனப்பான்மை கூடாது என்ற விழிப்புணர்வு, சிறார்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கும்போதே ஏற்படுத்தப்பட வேண்டும். அதனால்தான், எல்லாரும் சமம் என்பதை சிறார்களின் மனத்தில் பதியவைக்கும்விதமாக அனைவருக்கும் ஒரே மாதிரியான பள்ளிச்சீருடையை அறிமுகம் செய்தார் காலஞ்சென்ற முதல்வர் காமராஜர்.
“மதிய உணவுத்திட்டம், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் சாதி குறித்த எண்ணமே ஏற்படாத வகையில் மாணவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
“பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் சுர்ஜித் போன்ற இளையர்கள் சாதி வெறியுடன் செயல்பட்டு, ஆணவக்கொலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கவேண்டிய அவலம் தொடராது,” என்கிறார்கள் கல்வியாளர்கள்.
சட்டம் மட்டும் போதுமா?
ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழகச் சட்டப்பேரவையில் சிறப்புச் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து, ஒருமித்த கருத்தோடு நிறைவேற்ற வேண்டும் என பல கட்சிகள் குரல்கொடுத்துள்ளன.
அதேசமயம், சட்டம் ஒழுங்கு தொடர்பான தடுப்பு நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. சமூக அறிவியல் தளத்திலான பரப்புரைப் பணிகளும் கட்டாயம் தேவை என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
தர்மபுரி, உசிலம்பட்டி பகுதிகளில் முன்பு அதிகம் நிகழ்த்தப்பட்ட பெண் சிசுக் கொலைகள் விழிப்புணர்வுப் பரப்புரைகளால்தான் குறைந்தன. அதேவிதமான முன்னெடுப்புகள் சாதி ஆணவக் கொலை தடுப்புக்கும் அவசியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
“அரசு, காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும்,” என்று ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி கூறியதாக பிபிசி தமிழ் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், அரசியல் கட்சிகள் முதல் அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துகிறது என்று அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன் கூறியதாக அதே கட்டுரை தெரிவிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் உதவியோடு பல ஆணவக் கொலைகள் உடனுக்குடன் வெளிச்சத்துக்கு வருவதாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறியுள்ளார். பல சமயங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களை முன்வைத்து பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
கோவில் திருவிழாவின்போது தேரை குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டுசெல்வது தொடர்பாகப் பிரச்சினை, தீண்டாமைச் சுவர், இரட்டைக் குவளை, சாதி மறுப்புத் திருமணம் போன்ற காரணங்களே சாதிப் படுகொலைகளுக்கு காரணமாக அமைகின்றன.
தொடக்கத்தில் சாதியை மீறி திருமணம் நடக்கும்போது காதலர்களில் ஒருவர் கொல்லப்பட்ட நிலை மாறி, இருவரும் கொல்லப்பட்ட சம்பவங்களும் பதிவாகின. பின்னர் காதலுக்கு உதவியவர்களும் குறிவைக்கப்பட்டனர். அதையடுத்து காதல் ஜோடியின் பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவமும் உண்டு.
அவ்வளவு ஏன், திடீரென சாதிப் பெருமையைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, காதலனே காதலியைக் கொலை செய்த கொடூர விநோதமும்கூட அரங்கேறி உள்ளது.