உலகப் பொருளியல் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது இந்தியா.
ஒரு டிரில்லியன் பொருளியல் என்பதே இலக்கு என்கிறது தமிழக அரசு.
எனினும் இந்திய நகரங்கள், மாநிலங்களின் வளர்ச்சி என்பது அதன் உள்கட்டமைப்பில் வெளிப்படவில்லை என்பதே பெரும்பாலான இந்திய குடிமக்களின் ஆதங்கம்.
அந்தக் குறையைப் போக்க, ‘தேசிய சீர்மிகு, பொலிவுறு நகரங்கள்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது இந்திய அரசு. நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் இணக்கத்துடன் செயல்படும் வகையில் நகரங்களைப் புதுப்பிக்கும், மறு சீரமைக்கும் திட்டம்தான் இது. அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சு.
பொலிவு பெறும் நூறு நகரங்கள்:
கடந்த 2015ஆம் ஆண்டு 100 சீர்மிகு, பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி மிஷன்) பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக 13 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த 100 நகரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 நகரங்கள் தேர்வாகி உள்ளன. இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரங்களின் குறிப்பிட்ட ஒரு பகுதி, மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மாதிரி பகுதிகளாக உருவாக்கப்படும்.
இது அந்த நகரத்தின் பிற பகுதிகள், அருகில் உள்ள நகரங்களில் ஒருவித நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 100 நகரங்களும், குறிப்பிட்ட சில அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்கள் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்காக முதலில் பரிந்துரைக்கப்பட்டன.
இந்திய அளவில், புவனேஷ்வர் நகரம் முதலில் அறிவிக்கப்பட்ட 20 நகரங்கள் கொண்ட பட்டியலில் முதலிடம் பெற்றது. அதையடுத்து புனே மற்றும் ஜெய்ப்பூர் 2, 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளன. கோவை 13ஆம் இடத்தையும் சென்னை 18ஆம் இடத்தையும் பிடித்தன.
ஊக்கப்படுத்த அளிக்கப்படும் விருதுகள்:
சீர்மிகு, பொலிவுறு நகரங்களை உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் விருதுகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழகம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களுக்குத் தேர்வாகி விருதுகள் பெற்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு மேலும் முன்னேற்றம் கண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் தமிழகம் இரண்டாம் இடத்துக்குத் தேர்வாகி விருது பெற்றது. சிறந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ விருதை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றது.
மாதிரி சாலைகள் அமைத்தல், ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழலை உருவாக்கும் பிரிவு, தென் மண்டல ‘ஸ்மார்ட் சிட்டி’ விருது ஆகியவை கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன. குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும் ஸ்மார்ட் வகுப்பறை, மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதுகளும் கிடைத்தன.
புதுத்திட்டத்தால் புத்துணர்ச்சி பெற்ற துறைகள்:
சீர்மிகு, பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் செயல்பாடு காரணமாக மேற்குறிப்பிட்ட 100 நகரங்களில் ‘ரியல் எஸ்டேட்’ உள்ளிட்ட பல்வேறு துறைகள் அபார வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு நகரமும் மத்திய, மாநில அரசாங்கங்களிடம் இருந்து தலா ரூ.500 கோடி பெறும். இந்நகரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகமாக, சிறப்பாக இருப்பதால் மாநில அரசுகள் தயக்கமின்றி முதலீடுகளைச் செய்து வருகின்றன.
சென்னையில் வலுவான உள்கட்டமைப்பு, நவீன வாழ்க்கை முறை, இதர வசதிகள் அனைத்தும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நகரமாக மாறி வருகிறது என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள்.
எனவே, வீடுகள் வாங்குவதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் ஒன்றாக சென்னை மாறி வருகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 12 ஸ்மார்ட் நகரங்களில் முதன்மைச் சாலைகளின் மறுவடிமைப்பு, பலநிலை வாகன நிறுத்துமிடம், மிதி வண்டிகளுக்கான பாதைகள், அறிவார்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
இதேபோல் தண்ணீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, ஆற்றல் பாதுகாப்பு, நீர் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இருந்து ஸ்மார்ட் நகரத் திட்டங்களுக்குத் தேர்வாகியுள்ள நகரங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் காரணிகள் என நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நவீன தீர்வுகளைப் பின்பற்றும் நகரங்கள்:
“இந்த நகரங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை அடையவும், பல நவீன தீர்வுகளைப் பின்பற்றுகின்றன. நம்பகமான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் தமிழகத்தின் ஸ்மார்ட் நகரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“இந்த நகரங்கள் அங்கு வசிப்பவர்களுக்கும் செயல்பாட்டில் உள்ள வணிகங்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய எதிர்காலத்தை வழங்குகின்றன,” என்கிறது தமிழக அரசு.
சிறந்த சுகாதாரமான நகரங்கள், வசதிகளுடனான இணைப்பு, மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றை ஸ்மார்ட் நகரங்கள் மூலம் பெற முடியும்.
இதற்கிடையே, ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 நகரங்களில் இதுவரை சென்னை, புனே உள்ளிட்ட 22 நகரங்களில் அனைத்து திட்டப் பணிகளும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகரங்களிலும் இந்தத் திட்டம் முழுமை அடைந்துவிடும் எனவும் கூறுகின்றனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, திருச்சி, தஞ்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அதிபர் வழங்கிய அறிவுரை:
இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பொலிவுறு நகரங்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பருவநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு பொலிவுறு நகரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அந்நகரங்களில் எரிசக்தி செயல்திறனுக்காக பசுமைக் கட்டடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இந்த 100 நகரங்களிலும் இன்னும் விரிவான அளவில் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
“நாடு முழுவதும் பாதுகாப்பான, சுத்தமான சுற்றுப்புறங்களை உருவாக்க வேண்டும். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். தங்கள் நகரம், குடியிருப்பாளர்கள் தொடர்பான தங்களுடைய கடமையைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றும் அதிபர் முர்மு மேலும் வலியுறுத்தினார்.
சுகாதாரச் சேவைகள், கல்வி நிறுவனங்கள், நகரங்களைப் போன்ற அடிப்படை வசதிகள், ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இது நகரங்களின் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
பொலிவுறு நகரங்களில் பொலிவு பெறும் மக்களும் இருந்தால்தான் அவை புத்தாக்க நகரமாக உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.