புதுடெல்லி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், அனைத்துலக கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி இந்த வாதங்களை முன்வைத்தார்.
இலங்கையுடன் இந்தியா தற்போது ஆகச்சிறந்த அரச தந்திர உறவைக் கொண்டுள்ளதாகவும் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேசி இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைக் கெடுத்துக்கொள்ள அரசு விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த வழக்கின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், கடல்சார் சூழலியல் குறித்து கவலை தெரிவித்தனர். இலங்கை மீனவர்கள் தங்களின் கடல், நதிப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதாலேயே அங்கு மீன்வளம் பேரளவில் அதிகரித்து வருகிறது என்றும் இந்தியப் பகுதிகளில் நீர்நிலைகள் அதிகளவில் அசுத்தப்படுத்தப்படுவதால் மீன்வளம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் இதைத் தடுப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், எல்லை தாண்டி மீனவர்கள் செல்லும்போது மட்டுமே இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் இந்திய கடல் எல்லைக்குள் எவரும் கைது செய்யப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கச்சத்தீவு விவகாரம் இலங்கை, இந்தியா நாடுகளுக்கு இடையேயான அரச தந்திர ரீதியிலான விவகாரம் என்பதால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
