தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயில் தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்

2 mins read
3bbd686c-5aaa-48fc-8696-ee9287bda442
மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ்

செங்கல்பட்டு: இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருள்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்றும் இத்துறை ஆற்றல்மிக்கது என்றும் போட்டித்தன்மைக் கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

“மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதால், பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.

“பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

“இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்றார் ஸ்டாலின்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய பெரு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக உள்ளது என்றார்.

“இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் லட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

“தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது.

“பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்துக்கு தெரியும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்