சென்னை: இந்தியாவில் கிராமப்புறப் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 15 கோடியாக அதிகரித்துள்ளது என கேரள மாநிலத் திட்டவாரிய துணைத்தலைவர் வி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், இந்தியாவின் கிராமப்புற ஊழியர் வர்க்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் என்றார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு எடுகப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, 2011-12ஆம் ஆண்டு 10.1 கோடியாக இருந்த கிராமப்புறப் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 2023-24 ஆண்டில் 15.3 கோடியாகவும் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23.3 கோடியில் இருந்து 25.8 கோடியாகவும் உயர்ந்துள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார்.
குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கிராமப்புறப் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த கிராமப்புற ஊழியர்களின் எண்ணிக்கை 41.1 கோடி பேராக இருக்கிறது என்றார்.