புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ்கான்’, தனது நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தோரில் 25 விழுக்காட்டினர், திருமணமான பெண்கள் என்று அரசாங்கத்திடம் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாலினம், சமயம் ஆகியவற்றைத் தாண்டி அனைத்து ஊழியர்களும் உலோகத்தால் ஆனவற்றை அணிவதைத் தவிர்க்கவேண்டும் என்ற தனது பாதுகாப்பு நடைமுறை பாகுபாடற்றது என்று அது தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமான பெண்களை வேலைக்கு அந்நிறுவனம் எடுப்பதில்லை என்ற அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, ‘ஃபாக்ஸ்கான்’ அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமற்ற குறிப்பு ஒன்றைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
அத்தகைய ஊடக அறிக்கைகள், வேகமாக வளர்ந்துவரும் இந்திய உற்பத்தித் துறையைப் பழி சொல்வதாகும் அது சொன்னது.
முன்னதாக, ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியானது.
இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
1976ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தைக் குறிப்பிட்டு, “ஆண், பெண் ஊழியர்களைப் பணியமர்த்துவதில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது,” என மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
திருமணமான பெண்களை வேலையிலிருந்து விலக்கும் ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத்தின் நடவடிக்கை பற்றி தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையிடம் இருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாகவும் அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உண்மை நிலை அறிக்கையை வழங்குமாறு வட்டாரத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தொழிலாளர் அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், தனது தொழிற்சாலையில் தற்போது கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுப் பெண்களும் 30 விழுக்காட்டு ஆண்களும் பணிபுரிவதாக ‘ஃபாக்ஸ்கான்’ தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனது தொழிற்சாலை, இந்தியாவிலேயே பெண்கள் வேலைவாய்ப்புக்கான ஆகப் பெரிய தொழிற்சாலை என்றும் அது கூறியது.
உச்சக் காலங்கட்டங்களில் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 45,000ஐ தொட்டிருப்பதாகவும் ‘ஃபாக்ஸ்கான்’ தெரிவித்தது.
அதோடு, திருமணமான இந்துப் பெண்கள் உலோகங்கள் (அணிகலன்கள், நகைகள்) அணிவது பாகுபாட்டுக்குரியது என்று கூறப்படும் கருத்துகள் முற்றிலும் நியாயமற்றவை என்று அந்நிறுவனம் கூறியது.
அத்தகைய தொழிற்சாலைகளில் உலோகம் அணிவது ஒரு பாதுகாப்பு விவகாரம் என்று அது சொன்னது.