வேலூர்: இந்தியாவை செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக மாற்றவேண்டும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் வேலூர் பகுதியில் இயங்கிவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிலதிபர்களாக உயர வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் செல்வதைவிட, ரூ.1,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கும் லட்சியம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் பிரதமரின் ‘இந்தியா ஏஐ மிஷன்’ திட்டத்தின்கீழ் பகுதிமின்கடத்தி, ‘ரோபோடிக்ஸ்’ போன்ற துறைகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலவிய மாசு, போக்குவரத்துச் சிக்கல்களுக்கு ஐஐடி மாணவர்களின் புதுமையான யோசனைகள் மூலமே தீர்வு காணப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், சமூகப் பிரச்சினைகளுக்கு மாணவர்கள் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.
உயர்கல்வி, மருத்துவ இடங்கள்
பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்த விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், இந்தியாவில் உள்ள மருத்துவ இடங்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டினார்.
இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கவும் சுகாதாரத் துறையை மேம்படுத்தவும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வரம்பை உயர்த்தி ஆண்டுக்கு 8 லட்சம் மருத்துவ இடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.


