ஈரோடு: போர் விமான இயந்திரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இடம்பெறும் என இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
50 சோதனைக்கூடங்கள் மூலம் விமானங்கள், ஏவுகணை, போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் தரை போர் வாகனங்கள் ஆகியவற்றை அந்நாட்டு ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ஆய்வாளர்கள் உருவாக்கி வருவதாக அவர் சொன்னார்.
போர் விமான இயந்திரத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் உலகில் 4 நாடுகளில் மட்டும் உள்ளதாகப் பேசிய அவர், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா ஐந்தாவது நாடாக அதில் இடம்பெறும் என்றார்.
மேலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய நகரங்களை ஒருங்கிணைத்து பாதுகாப்புத் தொழில்துறை தடம் உருவாக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.