தருமபுரி: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (சிப்காட்) சார்பில் தருமபுரியில் தொழிற்பூங்கா அமைக்க இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2024-25 வரவுசெலவுத் திட்ட அறிக்கைத் தாக்கலின்போது தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதற்காக தருமபுரியை ஒட்டிய அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை உள்ளிட்ட சிற்றூர்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 6,035 ஏக்கரில் அந்தத் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 1,725 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அத்துடன், ரூ.14.08 கோடி செலவில் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், அந்தத் தொழிற்பூங்காவிற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், அத்தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
அத்தொழிற்பூங்காவில் உலோகம், மின்சார வாகனம், மின்கலம், பெட்ரோகெமிக்கல் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.462 கோடியில் அமைக்கப்படும் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா மூலம் ஏறத்தாழ 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.