கோவை: இந்தியக் கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானியப் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் கசியவிட்டதாக, இந்தியக் கடற்படை வீரரை ஆந்திர மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கோவையில் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார். அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் பணியாற்றி வந்தபோது, சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தான் பெண் உளவாளி ஒருவரின் தொடர்பில் சிக்கியுள்ளார்.
அப்பெண் விரித்த காதல் வலையில் வீழ்ந்த அவர், விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தின் செயல்பாடுகள், கடற்படைக் கப்பல்களின் நகர்வுகள், பல்வேறு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான மின்னிலக்கத் தடயங்களைக் கண்டறிந்த ஆந்திரப் பிரதேசக் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு, கடற்படை அதிகாரிகளின் அனுமதியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டது.
விசாரணையில் கடலோடியின் தேசவிரோதச் செயல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவை ‘ஐ.என்.எஸ் அக்ரானி’ தளத்தில் மேலாண்மைப் பயிற்சியில் இருந்த அவரை அதிகாரிகள் கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், மேல் விசாரணைக்காக விஜயவாடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு ஹவாலா, மின்னிலக்க வழிகளில் பணம் கைமாறியுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
