சண்டிகார்: அமெரிக்காவில் 33 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாகக் குடியேறியதற்காக 73 வயது இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுரை இப்போது அந்நாட்டு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹர்ஜித் கவுர் தனது இரு மகன்களுடன் ஈஸ்ட் பே பகுதியில் குடியேறினார். சுமார் 33 ஆண்டுகளாக அவர், சான்பிரான்சிஸ்கோவின் ஈஸ்ட் பே பகுதியில் வசித்து வருகிறார். அவரது இரு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க குடிநுழைவுத் துறை அதிகாரிகள், சட்டவிரோதமாகக் குடியேறியதாக ஹர்ஜித் கவுரை கைது செய்தனர். இதை எதிர்த்துச் சட்ட ரீதியாகப் போராட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
திருவாட்டி ஹர்ஜித் கவுர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடிநுழைவுச் சோதனைக்குச் சென்று வருகிறார். அவர்மீது இதுவரையிலும் எவ்வித குற்றவியல் புகார்களோ வழக்குகளோ இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
குடிநுழைவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திருவாட்டி ஹர்ஜித் கவுரை விடுவிக்கக் கோரி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (12.9.2025) சான் பேப்லோ டாம் ரோடு பகுதியில் கிட்டத்தட்ட 200 பேர் பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஈஸ்ட் பே பகுதி மக்கள் முழுவதும் ஹர்ஜித் கவுருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஹர்ஜித் கவுரை விடுவிக்க ரீதியாகப் போராட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

