சென்னை: இண்டியா கூட்டணியில் இணைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.
அதன்பின்னர், அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்கு வருவதே நல்ல பலனைத் தரும்,” என்றார்.
“விஜய் தனது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று கூறியிருந்தார். எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்,” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
பரந்தூர் செல்லும் விஜய்
இதனிடையே, நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 20) சந்திக்க காஞ்சிபுரம் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தமிழக அரசின் சார்பில் நிலம் எடுக்கும் பணிகளுக்கான உத்தரவுகளும் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.