சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழிற்சாலையை அமைப்பதற்கான பெரும் ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனம் பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி (US $1.57 பில்லியன்) மதிப்பிலான திட்டமாக அது இருக்கும் என்று அந்நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.
இந்தத் திட்டத்தின் மூலம் எல் அண்ட் டி நிறுவனம் அதிகாரபூர்வமாக ‘ஏஐ’ தயாரிப்புத் துறையில் கால்பதிக்கிறது.
சென்னைத் தரவு மைய வளாகத்தில், அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட ‘டுதெர் ஏஐ’ நிறுவனத்திற்காக 10,000 அதிஉயர் ‘என்விடியா’ சில்லுகளை அது உருவாக்க உள்ளது.
முதல் கட்டமாக 250 மெகாவாட் மின்சாரத் திறனுடன் அமைக்கப்படும் அந்த மையம், எதிர்காலத்தில் கிகாவாட் அளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவை உலகளாவிய அடுத்த தலைமுறை ஏஐ உள்கட்டமைப்பு மையமாக மாற்றுவதில் இத்திட்டம் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பரவலாக்க எல் அண்ட் டி நிறுவனத்தின் திறன் பெரிதும் உதவும் என்று ‘டுதெர் ஏஐ’ தலைமைச் செயல் அதிகாரி விபுல் வேத் பிரகாஷ் கூறினார்.
அறிவிப்பைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் எல் அண்ட் டி பங்குகள் 1.37 விழுக்காடு உயர்ந்து ரூ.4,046.55க்கு வர்த்தகமாகின.
US$131 மில்லியன் ஒப்பந்தத்தைப் பெற்ற ‘பிளாக் பாக்ஸ்’
இதற்கிடையே, மின்னிலக்க உள்கட்டமைப்பு சேவை நிறுவனமான ‘பிளாக் பாக்ஸ்’, அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் முன்னணி ‘ஹைப்பர்ஸ்கேலர்’ நிறுவனத்திடமிருந்து US$131 மில்லியன் மதிப்பிலான தரவு மையத் திட்டத்தைப் பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.
பிளாக் பாக்ஸ், அமெரிக்காவின் முக்கியப் பகுதியில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு மின்னிலக்க உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கவுள்ளது.
இத்திட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஒப்பந்தம் மூலம், பிளாக் பாக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலில் மற்றுமொரு அனைத்துலக முன்னணி நிறுவனம் இணைந்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளில் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, மேலாண்மைச் சேவைகள், தொழில்நுட்பப் பொருள்களை பிளாக் பாக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த ஒப்பந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வியாழக்கிழமை வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 8.2 விழுக்காடுவரை உயர்ந்தன.


