உலகளவில் நேரம் தவறாமல் செயல்படும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலில், இந்திய விமான நிலையங்களில் கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று குறித்த நேரத்தில் இயக்கப்படும் விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்றுள்ளது.
உலகப் பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமான 'அஃபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' 'ஓஏஜி', உலகளவில் குறித்த நேரத்தில் செயல்படும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையின்படி, 2022ல் உலகளவில் குறித்த நேரத்தில் செயல்படும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமான இந்திய விமான நிலையங்களில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம் இடம்பெற்றுள்ளது.
அது, 88.01 விழுக்காட்டுடன் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. சேவை ரத்து விகிதம் 0.54 விழுக்காடு மட்டுமே. இந்தப் பட்டியலில் ஜப்பானின் ஒசாகா அனைத்துலக விமான நிலையம் 91.45 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
"எப்போதும் குறித்த நேரத்தில் செயல்படும் நாடாக கருதப்படுகிறது ஜப்பான். அவ்வகையில், சிறந்த 20 அனைத்துலக விமான நிலையங்களில், 10 விமான நிலையங்கள் ஜப்பானைச் சேர்ந்தவை," என்று அறிக்கை கூறியது.
இதற்கிடையே, குறித்த நேரத்தில் செயல்படும் விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 15வது இடத்தைப் பெற்றுள்ளது. 2019ல் அது 54வது இடத்தில் இருந்தது.
இந்தப் பட்டியலில் இந்தோனீசியாவின் கருடா இந்தோனீசியா விமான நிறுவனம் 95.63 விழுக்காட்டுடன் முதலிடத்திலும் சஃபேர் (95.30%) மற்றும் யூரோவிங்ஸ் (95.26%) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன. தாய் ஏர்ஏஷியா (92.33%) நான்காவது இடத்திலும் ஜெஜு ஏர்லைன்ஸ் (91.84%) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

