சென்னை: சென்னையிலிருந்து வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலை 113 பேருடன் பெங்களூருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.
காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 107 பயணிகள், ஊழியர் அறுவர் என 113 பேருடன் அவ்விமானம் கிளம்பியது.
விமானம் பறக்கத் தொடங்கியதும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக அதுகுறித்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதனையடுத்து, விமானத்தை மீண்டும் சென்னையிலேயே அவசரமாகத் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, காலை 9.05 மணியளவில் அந்த இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு, ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதன்பின் அதே விமானத்திலோ அல்லது மாற்று விமானத்திலோ பயணிகள் அனைவரும் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.