சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்து முனையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூடுதல் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் அதிக அளவிலான பயணிகள் நாள்தோறும் வந்துசெல்லும் ரயில் நிலையங்களில் தாம்பரமும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக சுமையுடன் பயணம் செய்வோரின் பயணத்தை எளிதாக்கவும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
நிலையத்தின் நடைமேடைகள், நடைமேம்பாலங்கள், நுழைவு-வெளியேறும் பகுதிகளுக்கு இடையே தடையற்ற, பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்படி, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது புதிய மின்தூக்கிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் வரும் நவம்பர் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைமேம்பாலத்துடன் இணைக்கப்படும் 10 நகரும் படிக்கட்டுகளின் கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இவை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வசதிகளையும் சேர்த்து மொத்தம் 10 மின்தூக்கிகள், 16 நகரும் படிக்கட்டுகள் பயணிகளின் சேவைக்காகப் பயன்பாட்டில் இருக்கும்.
