ரூ. 10 பி. டாஸ்மாக் ஊழல் புகார்: நிர்வாகிகளுக்கு அழைப்பாணை

1 mins read
b978c001-cb05-4250-88f0-c71e95740f4d
தமிழகத்தில் டாஸ்மாக் கடை. - படம்: இந்து

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில், ரூ.10 பில்லியன் மதிப்பில் ஊழல் நடந்தது கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது.

அது தொடர்பான விசாரணைக்காக அந்நிறுவனத்தின் இயக்குநர், பொது மேலாளர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் டாஸ்மாக் செயல்படுகிறது. அந்நிறுவனம், மது ஆலைகளிலிருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் 4,830 சில்லறைக் கடைகள் வாயிலாக விற்கிறது.

அதில் நடந்ததாக நம்பப்படும் முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அச்சோதனையில் டாஸ்மாக்கில் ரூ.10 பில்லியன் அளவுக்கு ஊழல் நடந்தது தெரியவந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடரலாம் என்று உத்தரவிட்டது.

அதையடுத்து டாஸ்மாக் ஊழல் குறித்த விசாரணைக்கு நேரில் முன்னிலையாகவேண்டும் என அதன் இயக்குநர் விசாகன், பொது மேலாளர்கள் சங்கீதா, ராமதுரை முருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) அழைப்பாணை அனுப்பினர்.

குறிப்புச் சொற்கள்