ரூ.2,666 கோடி முதலீடு; 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் மேலும் இரு நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

ரூ.2,666 கோடி முதலீடு; 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் மேலும் இரு நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

2 mins read
1734d6d1-6968-4507-bde6-fa447f08361e
ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் சிகாகோவில் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.2,666 கோடி முதலீட்டில் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் சிகாகோவில் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஜாபில் நிறுவனத்துடன் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது,” என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பயணத்தில், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஏற்கெனவே 4,350 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜாபில் நிறுவனம் (Jabil Inc.), ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குபவர்களில் முன்னணி நிறுவனமாகும்.

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன், மின்னிலக்க மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஆட்டோடெஸ்க் நிறுவனமானது கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி, பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள், சேவைகளை வழங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்