மோசடிகளைத் தவிர்க்க பட்டுத் துணிகளை ‘சில்க் மார்க்’ முத்திரையுடன் வாங்கும்படி வலியுறுத்து

2 mins read
88b4e633-6284-4310-ab3d-f4ec459124ef
சென்னை, அம்பத்தூரில் உள்ள அன்னை வயலெட் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டுத் துணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 3

சென்னை: பட்டுத் துணி ரகங்களைப் பார்த்து வாங்கும்போது ‘சில்க் மார்க்’ முத்திரை உள்ளதா என பொதுமக்கள் விவரம் கேட்டறிந்து அதனை உறுதிசெய்துகொண்டு வாங்கவேண்டும். இதன்மூலம், மோசடிகளைத் தவிர்க்கமுடியும் என இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் உதவிச் செயலாளர் கே.எச்.ஹேமாஸ்ரீ கூறியுள்ளார்.

மத்திய ஜவுளித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு வாரியத்தின் இந்திய சில்க் மார்க் நிறுவனமும் குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இணைந்து ‘சில்க் மார்க்’ குறித்த விழிப்புணர்வு முகாமை சென்னை, அம்பத்தூரில் உள்ள அன்னை வயலெட் கலை, அறிவியல் கல்லூரியில் நடத்தின.

இந்நிகழ்வில் பங்கேற்ற இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் உதவிச் செயலாளர் ஹேமாஸ்ரீ பேசியபோது, இந்தியா இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அத்துடன், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் நாடாகவும் உள்ளது.

நாட்டின் 25 மாநிலங்களில் உள்ள 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

மல்பெரி, தாசர், எரி, முகா ஆகிய நான்கு வகை பட்டுகளையும் உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியாதான்.

இந்திய சில்க் மார்க் நிறுவனம், கடந்த 2004ல் புதிய ‘சில்க் மார்க்’ முத்திரையை அறிமுகப்படுத்தியது.

போலிப் பட்டுப் பொருள்களை வாங்குவதில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதும் பட்டு சார்ந்த தொழிலில் ஈடுபடுவோரின் நலனைக் காப்பதும் இந்த ‘சில்க் மார்க்’ முத்திரையின் முக்கிய நோக்கமாகும்.

‘சில்க் மார்க்’ லேபிளில் உள்ள ‘க்யூஆர்’ குறியீட்டை வருடுவதன் மூலம் தாங்கள் வாங்கும் பட்டு தூய்மையானதா? இல்லையா? என்பதை பொதுமக்களால் அறிந்து கொள்ளமுடியும்.

எனவே, பட்டுத் துணி ரகங்களை வாங்கும்போது அவற்றில் ‘சில்க் மார்க்’ முத்திரை உள்ளதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னர் அதனை வாங்க வேண்டும். இதன்மூலம், மோசடிகளைத் தவிர்க்கமுடியும் என்று அவர் கூறினார்.

‘சில்க் மார்க்’ லேபிளுடன் பொருள்களை விற்பனை செய்யும் 5,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்று ஹேமாஸ்ரீ மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்