தமிழகத்தில் உள்ள 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை

தமிழகத்தில் உள்ள 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை

படம்: இந்து தமிழ் திசை

19 Jun 2026 - 4:57 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொது மக்களுக்குச் சேவை வழங்க அதிகாரிகள் பலர் லஞ்சம் பெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஜூன் 4ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் சிக்கியது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, சிதம்பரம், திருச்சி, அரியலூர், நீலகிரி, தருமபுரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகக் கதவுகள் மூடப்பட்டு உள்ளே இருந்த அதிகாரிகள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்களுடைய கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு தனி இடத்தில் வைக்கப்பட்டன என்றும் ஊடகத்தகவல்கள் தெரிவித்தன.

அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள், முக்கியமான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், அலுவலக ஊழியர்களுடன் தொடர்பில் உள்ள இடைத்தரகர்கள், அலுவலகப் பணிகளுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

சோதனையின் முடிவில் கணக்கில் வராத 32 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள் ‘ஜிபே’ கைப்பேசி பரிமாற்றச் செயலி மூலம் கைமாறிய 6 லட்சம் ரூபாய் குறித்தும் விசாரிக்கப்படுவதாகக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்துஅலுவலகம்சோதனைதிருச்சிபதிவேடுஊழியர்கள்அதிகாரிபறிமுதல்