சென்னை: குடிநீரை அதிகம் பயன்படுத்தும் கட்டடங்களில் திறன்மானி (ஸ்மார்ட்மீட்டர்) பொருத்தும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. அப்பணிக்காகத் தனியார் நிறுவனத்துடன் சென்னைக் குடிநீர் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் அளவு, கட்டணம் வசூலிக்கும் முறைகள் குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது.
சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ஏறக்குறைய நூறாயிரம் கட்டடங்களில் திறன்மானிகள் பொருத்தப்பட உள்ளன. ரூ. 273 கோடி செலவில் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னதாக, அதுபற்றிப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் குடிநீர் வாரியம் தெரிவித்திருந்தது.
முதற்கட்டமாக, திறன்மானிகளைப் பொருத்துவதற்கு 26,886 வணிகக் கட்டமைப்புகள் உட்பட மொத்தம் 73,000 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தனியார் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பை இயக்கிப் பராமரிக்கும்.

