தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருங்கும் ‘ஃபெங்கல்’ புயல்; முடங்கிய டெல்டா மாவட்டங்கள்

3 mins read
0298ccf1-8016-4139-9ea3-b96a14a3f6c4
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரில் செல்லும் வாகனங்கள். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘ஃபெங்கல்’ புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பகுதி வழியாக தமிழக கடற்கரை நோக்கி இந்தப் புயல் நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை, நான்கு நாள்களுக்கு மிக கனமழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்:

இந்நிலையில் நாகை, மயிலாடு​துறை, திரு​வாரூர், காரைக்​கால் உள்ளிட்ட பல மாவட்டங்​களில் கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.

பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க நேரிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடி​யிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்​ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின.

நாகை, வேளாங்​கண்ணி, வேதா​ரண்​யம், தரங்​கம்​பாடி, பூம்​பு​கார் உள்ளிட்ட பகுதி​களில் கடல் சீற்​றத்​துடன் காணப்​படு​கிறது. மீன்​வளத் துறையின் எச்சரிக்கையை அடுத்து, மீனவர்கள் 6வது நாளாக நேற்றும் கடலுக்​குள் மீன்​பிடிக்கச் செல்​ல​வில்லை.

பல மாவட்டங்களில் சாலைகள் வெறுச்சோடிக் காணப்பட்டன என்றும் போக்குவரத்து அறவே இல்லை என்றும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், தஞ்சாவூரில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், சம்பா, தாளடிப் பயிர்​களுக்கு இந்த மழைப்பொழிவு மிகுந்த பயன் அளிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரி​வித்துள்ளனர்.

தொடர்மழை காரணமாக கல்லணைக் கால்​வா​யில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்​தப்​பட்​டு உள்​ளது.

கரையில் நிறுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள்:

‘ஃபெங்கல்’ புயல் சின்னம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அங்கு நூற்றுக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, அதிகபட்சமாக பாம்பன் பகுதியில் 19.30 மி.மீ மழை பெய்துள்ளது.

தங்கச்சிமடம் 17.00 மி.மீ, ராமேசுவரத்தில் 10.20 மி.மீ மழை பதிவானது.

பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு:

கனமழை எச்சரிக்கை காரணமாக, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், அரியலூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யின் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது என வானிலை ஆய்வு மையம் மீண்டும் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர் மழை:

சென்னையில் கடந்த இரு நாள்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, வாகனமோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதையடுத்து, தேங்கிய மழைநீரையும் ஆங்காங்கே முறிந்து விழுந்த சில மரங்களையும் அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவானது. எண்ணூர் துறைமுகம், பள்ளிக்கரணையில் தலா 7 செ.மீ மழையும் தரமணியில் 6, கிண்டியில் 5, மீனம்பாக்கம், நந்தனம், நுங்கம்பாக்கத்தில் தலா 4 செ.மீ மழையும் பதிவானது.

விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குறிப்புச் சொற்கள்