சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அண்மையில் திரைப்படத் தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சங்கரின் தாயார் நீதிமன்றத்தை அணுகினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு இதய பிரச்சினை, நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் இடைக்கால பிணை வழங்கக் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், டிசம்பர் 26 முதல் மார்ச் 25 வரை இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், “நீங்கள் (காவல்துறை) ஏன் செய்தியாளர்கள் பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டப்பேரவையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது.
“தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமையும்.
“நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக்கைதியின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டு பிணையில் விடுவிக்கத் தயாராக உள்ளது. 2026 மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னர் சங்கர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்,” என நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

