சென்னை: தமிழகத்தில் மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய அனைத்துலக நகரம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றில் பொருத்தமான இடத்தை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஐந்து இடங்களும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கெல்லாம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசிடம் விரிவான அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் தொழிற்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
எனவே, பிற மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை வாய்ப்புகளுக்காக இந்த நகரங்களுக்குப் படையெடுக்கின்றனர். இதனால் இந்நகரங்களின் எல்லைப் பகுதிகள் விரிவடைகின்றன.
மக்கள் தொகை அதிகரிப்பதால் பல்வேறு நகரங்களில் சாலை, குடிநீர், சுகாதாரம், பேருந்து உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, புதிய நகரங்களை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் புதிய நகரத்தில் குடியிருப்பு, அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து வசதிகளும் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
“இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்வதைத் தவிர்க்க முடியும். மேலும், நகரமயமாக்கல், அது தொடர்பான சவால்களை அரசாங்கத்தால் திட்டமிட்டு எதிர்கொள்ள முடியும்,” என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஒப்பந்த நிறுவனங்கள் விரிவான ஆய்வு அறிக்கைகளை அரசாங்கத்திடம் அளித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய நகரை உருவாக்கும் பணி தொடங்கும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
புதிய நகரத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பணியிட வசதி, வணிக வளாகம், வங்கிகள், பூங்கா, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய நகரத்துடன் சென்னை மாநகரத்தை இணைக்கும் வகையில் சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், மெட்ரோ ரயில் விரிவாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.