தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் மீது அனைத்துலக நிறுவனங்கள் நம்பிக்கை: ஸ்டாலின் பேச்சு

2 mins read
fe62ba12-67df-490b-bdbf-a6b5de743a68
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக 2.47 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீதும் சென்னை மீதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மீதும் உலக நிறுவனங்கள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16வது அனைத்துலக இயந்திரக் கருவிகள் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 468 நிறுவனங்கள் இடம்பெறுள்ள இக்கண்காட்சி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் அதை நவீனப்படுத்தவும் உதவும் என்றார்.

35 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைப் பொருத்தவரை, இந்திய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஸ்டாலின், இந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் தமிழகம் முழுவதும் 2.47 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள 16 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6 லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்றும் இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சாலையில் அதிக அளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

“தமிழகம் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 14 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

“சென்னையில் கிண்டியிலும் அம்பத்தூரிலும் அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்கள், சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி கட்டப்பட்டுள்ளன.

“கோவையில் தங்கநகை பூங்கா, திண்டிவனத்தில் மருந்தியல் பொருள்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதுவரை 2,688 பேருக்கு தொழில் மனைக்கான பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் தொழில்துறை சாதனைகளையும் பட்டியலிட்டார்.

“இந்தியாவின் உற்பத்தித்துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு - 11.90 விழுக்காடு.

“மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

“ஜவுளி, இயந்திரங்கள், மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் இரண்டாவது இடம், இயந்திரங்கள்-தளவாடங்கள் உற்பத்தியில் 17.66% பங்களிப்போடு இரண்டாம் இடம்.

“தமிழ்நாட்டில் தொழில்முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு.

2024-25ஆம் ஆண்டில், 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது தமிழகம்,” என்றார் மு.க.ஸ்டாலின்.

இந்திய அளவில் ஏற்றுமதியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களில், 2021-22–ஆம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்