சென்னை: சென்னை விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று அனைத்துலக சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான வெளிநாட்டு கல்வியாளர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் விழா தொடர்பாக அந்தப் பல்கலைக் கழக மாணவர்களிடையே கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை கபடி, கவிதைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ஐடி கல்வி நிறுவனத்தின் தலைவர் பிரபு டேவிட் உட்பட 30க்கு மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். விழாவில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் ‘பொங்கலோ பொங்கலோ’ என்று மகிழ்ச்சி பொங்க முழங்கினர்.
நாட்டுப்புறக் கலைஞர்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மேலும் பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சல்லிக்கட்டுக் காளைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். பாரம்பரிய முறையில் அனைத்துலக சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடியது வெளிநாட்டு விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகன் குழுவினர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர்.