சென்னை: சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு சார்பாக, அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தமிழகத்துக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த உள்நாட்டுப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, சாகசச் சுற்றுலா, சொகுசு தங்குவிடுதிகள், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜா கூறினார்.
இதன் மூலம் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி, மாநில பொருளியல் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் சலுகைகள், ஆதரவு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த திரு ராஜா, தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முக்கிய முயற்சியாக இந்த மாநாடு அமையும் என்றார்.
மாநாட்டுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


