தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு அனைத்துலக அங்கீகாரம்

1 mins read
0093344e-7c1c-4802-bbcd-a0d652d7c464
448 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியை கடற்பசு பாதுகாப்பகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. - படம்: இணையம்

சென்னை: தமிழக அரசு அறிவித்த தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் உள்ள முதல் கடற்பசு (Dugong) பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க (ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், 2025 அபுதாபி ஐயுசிஎன் மாநாட்டுக்கு முன் இணைய வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட அனைவர்க்கும் பாராட்டுகள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கடற்பசுக்கள் உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளாகும். இவற்றின் முக்கிய உணவு கடற்புற்கள்தான். மீன்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும் உணவளிக்கும் இடமாகவும் கடற்புல் படுகைகள் இருந்து வருகின்றன. இந்தக் கடற்புல் படுகைகளைப் பாதுகாப்பதில் கடற்பசு உதவுகிறது

கடற்பசு இனத்தைப் பாதுகாப்பதால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவும்.

தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்.விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்