சென்னை: தமிழகத்திலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணைய வசதிக்காக அவை செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1.5 கோடியைத் தாண்டிவிட்டதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, 10 முதல் 20 வரையிலான கணினிகளும் படவீழ்த்திகளும் (புரொஜெக்டர்) வைக்கப்பட்டுள்ளது. அவை இயங்குவதற்கு அகண்ட அலைவரிசை இணையச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவற்றின் வேகம் குறைவாக இருந்தால் ரூ.1,500 கட்டணத்திற்குள் 100mbps வேகம் கொண்ட அகண்ட அலைவரிசைச் சேவையைப் பெற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, மாநிலத்திலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அத்தகைய இணையச் சேவை இணைப்பைப் பெற்றன. ஆனால், அந்த இணைப்புகளுக்கான கட்டணத்தைப் பள்ளிகள் முறையாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவற்றுக்கான நிலுவைத்தொகை ரூ.1.5 கோடியாக உயர்ந்துவிட்டது.
இதனையடுத்து, பள்ளிகளில் இணையச் சேவையை உடனடியாக நிறுத்தும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளின் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள அகண்ட அலைவரிசைச் சேவைக்கான கட்டணம் ரூ. 1.5 கோடி நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனே கட்டவில்லை எனில் சேவை துண்டிக்கப்படும் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனே தொகையைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.