ஜிபிஎஸ் கருவியுடன் வெளிநாடு செல்ல முயன்ற ஆடவரிடம் விசாரணை

1 mins read
6d977d8e-fb9d-4c74-929c-1c07bfc0723c
சென்னை விமான நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த ஆடவரது பயண உடைமையில் ‘ஜிபிஎஸ்’ திசைகாட்டும் கருவி இருந்ததையடுத்து அவரது பயணம் ரத்தானது.

திங்கள்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து எத்தியோப்பிய நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு இயக்கப்படும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

இந்நிலையில், விமானப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த 35 வயதான ராமச்சந்திரா என்பவரது கைப்பையில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பது சோதனை மூலம் தெரியவந்தது.

இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தாம் ஒரு புவியியல் நிபுணர் என்றும் தமது பணிக்காக அக்கருவியை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

இதை ஏற்காத அதிகாரிகள், விமானப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அக்கருவியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் அந்த ஆடவரின் பயணத்தை ரத்து செய்தனர். அதன்பின்னர் ஜிபிஎஸ் கருவியையும் அந்த ஆடவரையும் விமான நிலையக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோன்ற விதிமுறைகள் இருப்பது தெரிந்தும், அவர் எதற்காக ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் பயணம் மேற்கொள்ள முயன்றார் என காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்