சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கையடக்கக் கருவிகள் மூலமாகத் தானியங்கி முறையில் சரக்குகளைப் பதிவிடும் நடைமுறைக்கு மாறவுள்ளன.
கைமுறை பயன்பாடு வழி சரக்குக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, இதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள கையடக்கக் கருவிகள் மூலம் பதிவுகள் செய்யப்படும்.
ஒவ்வொரு பகுதியின் விற்பனை நடைமுறைக்கு ஏற்பப் பொருள்களை விநியோகிக்கவும், பயனீட்டாளர்களின் விருப்பமான பானங்கள் கிடைப்பதை மேம்படுத்தவும் இந்தப் புதிய முறை உதவும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, அதன் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டின் பாதியில் அனைத்து 38 மாவட்டக் கிடங்குகளிலும் முழுமையாகச் செய்யப்பட்ட கணினிமயமாக்கலின் தொடர்ச்சியாகவே இந்தப் புதிய நடைமுறை கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.
தொழில்நுட்பம் சார்ந்த இப்புதிய கட்டமைப்பு சரக்கு விநியோகத்தைச் சீரமைக்கவும் காகிதப் பயன்பாட்டை ஒழிக்கவும் விநியோகத் தடைகளைத் தடுக்கவும் உதவும்.
புதிய மின்னிலக்க முறையின்கீழ், ஒவ்வொரு கடைக்கும் உரிய சரக்குகளின் அளவுகள் கையடக்கக் கருவியில் தானாகவே பதிவேற்றப்படும்.
கடைக் கண்காணிப்பாளர்கள் இந்த அடிப்படை எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்றாலும், தேவையைப் பொறுத்து 20 விழுக்காடு வரை கூடுதல் சரக்குகளைப் பதிவிட முடியும்.
உறுதி செய்யப்பட்ட கோரிக்கைகள் நேரடியாக உள்ளூர் கிடங்குகளுக்கு அனுப்பப்படும்.
செப்டம்பர் 1ஆம் தேதி முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, தற்போது முதற்கட்டச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


