கோவை: பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி, அவற்றை மாற்ற முடியாது எனத் தெரிந்தவுடன் சோகத்தில் மூழ்கினார்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
தனது மகன் செந்தில்குமார் என்பவர், லாரி ஓட்டுநராகப் பணியாற்றியபோது, விபத்தில் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“அண்மையில் வீட்டில் தூய்மைப்படுத்தியபோது, ஒரு பையில் ரூ.500 நோட்டுகள் இருபதும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஐந்தும் இருப்பதைப் பார்த்தேன். அவற்றை மாற்றித்தர அதிகாரிகள் உதவ வேண்டும்,” என்று அந்த மூதாட்டி கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்ததைக் கண்டு, செய்தியாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊழியர்கள் என அனைவரும் மனம் கலங்கினர்.
பின்னர், அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அம்மூதாட்டிக்குக் கொடுத்தனர்.


