துாத்துக்குடி: தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில்துறை மாநாட்டில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் கிடைத்துள்ள முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ.32,554 கோடி எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இம்மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மொத்த முதலீடுகள் மூலம் ஏறக்குறைய 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
இந்த நிகழ்வின்போதே மேலும் 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.2,530 கோடி மதிப்பில் ஐந்து புதிய திட்டங்களை திரு ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மேலும், துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்னாம் நாட்டின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை திரு ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டவர், இந்தியாவின் மின் வாகன உற்பத்தித் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது என்றார்.
“இதை நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 40 விழுக்காடு தமிழகத்தில்தான் உற்பத்தி ஆகிறது.
தொடர்புடைய செய்திகள்
“வியட்னாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தைத் தொடங்கி பெருமை சேர்த்துள்ளனர். வியட்னாம என்றாலே வியப்புதான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும்,” என்றார் திரு ஸ்டாலின்.
இதற்கிடையே, தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் அவர் கையெழுத்திட்டு, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.16,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 114 ஏக்கரில் ரூ.1,119.67 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும் எளிமையாகத் தொழில் தொடங்க தமிழகம் உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே தக்க சான்று என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.