சென்னை: தமிழக சுற்றுலாத் துறைக்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அடுத்த மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சலுகைகள் குறித்து விவரிக்கும் தனி கொள்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டை ஈர்ப்பது தமிழக அரசின் திட்டம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தேசிய, உலக சுற்றுலாத் தலமாக தமிழகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனியாருடன் இணைந்து மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை கடலோர சுற்றுலா வழித்தடம், திருச்சி-தஞ்சை-நாகை இடையே சோழர்கால சுற்றுலா வழித்தடம், மதுரை-சிவகங்கை மரபு சார் சுற்றுலா வழித்தடம், கோவை-பொள்ளாச்சி இடையே இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் என முக்கியமான சுற்றுலாத் திட்டங்களும் இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சுற்றுலாத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை பிப்ரவரி மாதம் நடத்துகிறது தமிழக அரசு. இதற்காக தனி இணையத்தளம் அறிமுகம் செய்யப்படும் என்றும் மாநாட்டுக்கான பணிகளை சுற்றுலாத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


